இதன்பின், உங்கள் வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்கான ஒப்பந்தம் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய சூழலில், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள், 11 மாதம் என்ற அடிப்படையில் தான் வீட்டு வாடகைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொரு, 11 மாதத்துக்கு பின்னும் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் 11 மாதத்துக்கு மேற்பட்ட காலத்தை குறிப்பிட்டு வாடகை ஒப்பந்தம் செய்தால், அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
உங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தத்தை பதிவு செய்வதா வேண்டாமா என்பதில் நீங்கள் தான் உரிய முடிவை எடுக்க வேண்டும். தனி நபர்கள், குடும்பங்களுக்கு குடியிருப்பு நோக்கத்துக்கு வாடகைக்கு கொடுக்கும் வரை எவ்வித பிரச்னையும் இல்லை.
அதே நேரம், தனியார் நிறுவனங்கள், குறிப்பாக தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுக்கும் போது, வாய்மொழியாக பேசப்படும் வாடகை தொகையை நம்பி ஒப்பந்தம் செய்வது பிற்காலத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தளபரப்பு வாடகை, குத்தகை விலைப்புள்ளிகள் பட்டியலை கேட்டு வாங்கி அதன் அடிப்படையில் கட்டடத்துக்கு வாடகையை முடிவு செய்வது நல்லது. இதற்கு மாறாக வேறு தொகையை குறிப்பிட்டு வாடகைக்கு விடும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு பின் வாடகையை கொடுக்காமல் பிரச்னை செய்ய வாய்ப்பு உள்ளது.
அப்போது, வழக்கு தொடர்ந்தால், நிலுவை வாடகை தொகை சரியானதா என்பதை பொதுப்பணித்துறை விலைப்புள்ளிகள் அடிப்படையில் தான் நீதிமன்றம் முடிவு செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.
