கட்டுமான பொருட்களுக்கு அப்பால், வீட்டின் வடிவமைப்பு, தோற்றம் சார்ந்த பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2015ல் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
இதில், ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்கள் மட்டுமல்லாது, முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கட்டப்பட்ட வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், எந்தெந்த பகுதிகளில் என்ன உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது என்ற விபரம் திரட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், சாலையின் தரை மட்டத்தில் இருந்து மூன்று முதல், ஐந்து அடி உயரத்துக்கு வீட்டின் தரை மட்டத்தை உயர்த்த மக்கள் முன்வந்தனர். இதனால், புதிதாக கட்டப்படும் வீடுகளின் தரை மட்டம் சாலையில் இருந்து ஐந்து அடி வரை உயரமாக கட்டப்படுகிறது.
மழைக்காலத்தில் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிடாமல் இருக்க எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை நல்லது தான். ஆனால், சில சமயங்களில் கட்டடத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பை பாதிக்கும் வகையில் கட்டடத்தின் உயரம் அதிகரிக்கப்படுவது நல்லதல்ல.
சாலையில் என்ன உயரத்துக்கு வெள்ள நீர் வந்தது என்பதை கருத்தில் வைத்து அதைவிட சற்று உயரமாக வீட்டின் தரைமட்டம் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், இவ்வாறு உயரமாக வீட்டை கட்ட வேண்டும் என்றால், வடிவமைப்பு நிலையில் கவனமாக செயல்பட வேண்டும்.
குறிப்பாக, நீங்கள் வீடு கட்ட தேர்வு செய்த நிலம் அமைந்துள்ள பகுதியில் சாலையின் அகலம் என்ன என்று பாருங்கள். குறுகலான சாலை உள்ள இடங்களில், தரைமட்டத்தை வெகுவாக அதிகரிப்பதால் பயன்பாட்டு நிலையில் பிரச்னைகள் ஏற்படும்.
வெள்ள பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டின் தரைமட்டத்தை உயரமாக அமைக்க திட்டமிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், வீட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, வெளிப்புற தோற்றம், பயன்பாட்டுக்கு ஏற்ற நிலை ஆகியவற்றை கருத்தில் வைத்து செயல்பட வேண்டும்.
வீட்டின் தரை மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் போது போர்டிகோ, முகப்பு பகுதி போன்றவற்றின் அழகு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வாகனங்களை ஏற்றி இறக்குவதிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்.
